காதணி விழா நாளில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு @ கும்பகோணம்


கும்பகோணம்: தஞ்சை அருகே இன்று காதணி விழா நடக்கவிருந்த நிலையில், சிறுவன் கல்லணைக் கால்வாயில் குளிக்கச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், இந்தளூர், மேல தெருவைச் சேர்ந்தவர் சாய்ராம் (14). வேங்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சாய்ராமுக்கு இன்று காதணி விழா நடைபெற இருந்தது. இதைத்தொடர்ந்து, சாய்ராம் இன்று காலையில் தனது அண்ணன் முரளியுடன் இந்தலூர் கல்லணை கால்வாயில் குளிக்கச் சென்றார். இருவரும் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாய்ராம் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதையறிந்த முரளி கூக்குரலிட்டு கரையில் இருந்தவர்களுக்கு தெரிவிக்க, அவர்கள் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

உடனே அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி, உயிரிழந்த நிலையில் சாய்ராம் உடலை மீட்டனர். இது தொடர்பாக பூதலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதணி விழா நடைபெற இருந்த நிலையில் சாய்ராம் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

x