இஸ்ரேலியர்கள் மீதான ஹமாஸ் அமைப்பினரின் பாலியல் வன்முறைகள் குறித்த விசாரணையை தொடங்குவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் மீதான சர்வதேச பிம்பத்தை இந்த விசாரணை நொறுக்கும் எனவும் இஸ்ரேல் நம்புகிறது.
அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பின் அல்-கஸாம் ஆயுதக் குழுவினர், சுமார் 1400 இஸ்ரேலியர்களை கொன்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். இந்த கொலை குற்றங்களுக்கு அப்பால், இஸ்ரேலிய பெண்கள் மீது பாலியல் பலாத்காரத் தாக்குதலையும் ஹமாஸ் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் குறிவைத்த சூப்பர்நோவா இசைவிழாவில், ஏராளமானோர் சுட்டுக்கொல்லப்பட்டதுக்கு அப்பால் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தங்களிடம் சாட்சிகள் இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
’தாங்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானோம்’ என்று சொல்வதற்கு இஸ்ரேலிய பெண்கள் எவரும் தற்போது உயிரோடு இல்லை என்றும் இஸ்ரேல் கூறுகிறது. எனினும், சம்பவ இடத்தின் சாட்சிகள், சிசிடிவி உள்ளிட்ட காட்சிப் பதிவுகள், இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பினர் உள்ளிட்டவை மூலம், பாலியல் வன்முறை குறித்தான முழு விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவிக்கிறது.
காசா மீதான முழுத்தாக்குதலின் இறுதிக்கட்டத்தில் இருகும் இஸ்ரேல் அடுத்தபடியாக, ஹமாஸ் மீது இன்னொரு தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இந்த தாக்குதல், ஹமாஸ் அமைப்பின் சர்வதேச பிம்பம் மற்றும் முகமூடியை அம்பலப்படுத்தும் என இஸ்ரேல் நம்புகிறது. அவற்றில் ஒன்றாக ஹமாஸ் போராளிகள் என்று அறியப்படும் பயங்கரவாதிகளின் பாலியல் வன்முறை கோர முகத்தை உலகுக்கு தெரிய வைப்போம் என இஸ்ரேல் உறுதி தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...