கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட வனப்பகுதியில் போலீஸார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநில வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களை முன்வைத்து மாவோயிஸ்டுகள் கேரளாவில் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வனப்பகுதிகளில் இவர்கள் பதுங்கியிருந்து ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை பிடிப்பதற்காக தண்டர்போல்ட் மற்றும் சிறப்பு காவல் படையினரை கேரள போலீஸார் களமிறக்கி உள்ளனர்.
கடந்த வாரம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்ட் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது மூன்று மாவோயிஸ்டுகள் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் கண்ணூர் பகுதியில் உள்ள இருட்டி வனப்பகுதியில் தண்டர்போல்ட் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி மாவோயிஸ்ட் அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து போலீஸார் சுமார் பத்து நிமிடத்திற்கும் மேலாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மூன்று துப்பாக்கிகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த துப்பாக்கிகளை பயன்படுத்திய மாவோயிஸ்டுகள், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.