திருமணம் செய்து கொள்வதற்காக இசை தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திச் சென்ற பெண் தொழிலதிபர் உள்பட 5 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் போகிரெட்டி த்ரிஷா (31). இவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இசை தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா என்பவரின் புகைப்படத்தை, போகிரெட்டி த்ரிஷா மேட்ரிமோனி வலைதளத்தில் பார்த்துள்ளார். பின்னர் அவருடன் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நாளடைவில் போகிரெட்டி த்ரிஷாவுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் புகைப்படத்தைப் பயன்படுத்தி வேறு ஒரு நபர் அவரிடம் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால், பிரணவ் சிஸ்ட்லா புகைப்படத்தைக் கண்டு மனதை பறிகொடுத்த போகிரெட்டி த்ரிஷா, உண்மையிலேயே அவரை கண்டறிந்து, மோசடியாக அவரது புகைப்படம் பயன்படுத்தப்பட்டதை தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு பிரணவ் சிஸ்ட்லாவும் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகும் போகிரெட்டி த்ரிஷா, பிரணவ் சிஸ்ட்லாவிடம் சாட்டிங்கை தொடர்ந்துள்ளார்.
ஆனால் ஒருகட்டத்தில் அவர், போகிரெட்டி த்ரிஷாவை பிளாக் செய்துவிட்டார். இதனால் அதிருப்திஅடைந்த அவர், 4 பேரை கூலிக்கு அமர்த்தி, பிரணவ் சிஸ்ட்லாவை கடத்தி தனது அலுவலகத்துக்கு கொண்டுவந்தார். அதன் பின்னர், தன்னை திருமணம் செய்துகொண்டால்தான் விடுவிப்பேன் என அவரை தாக்கி மிரட்டியுள்ளார். இதனால் பிரணவ் சிஸ்ட்லா வேறு வழியின்றி, அவரது விருப்பத்தின் பேரில் செயல்பட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.
பின்னர், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து ஹைதராபாத் போலீஸில் பிரணவ் சிஸ்ட்லா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, போகிரெட்டி த்ரிஷா மற்றும் கடத்தலுக்கு அவர் அமர்த்திய 4 நபர்கள் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு... சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!