அதிர்ச்சி! அடுத்தடுத்து 7 பேரை கடித்து காயப்படுத்திய சிறுத்தை! குன்னூரில் பரபரப்பு!


குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை கடித்ததில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள், குடியிருப்பு பகுதிகளின் அருகில் சுற்றித்திரியும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளின் அருகில் நடமாடி வருகின்றன. தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் ஆகியவற்றை சிறுத்தைகள் வேட்டையாடும் சிசிடிவி காட்சிகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

சிறுத்தை தாக்கியதில் 7 பேர் காயம்

இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பாலாஜி நகர் பகுதியில் நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று நடமாடியது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு விமலா என்பவரது வீட்டிற்குள் சிறுத்தை புகுந்ததாக தீயணைப்பு துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர்கள் மீது சிறுத்தை பாய்ந்து தாக்கியது. இதில் வனத்துறையினர் மற்றும் செய்தியாளர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சிறுத்தை பிடிக்க முகாமிட்டுள்ள வனத்துறையினர்

இன்று காலை சிறுத்தை அப்பகுதியில் இருந்து வெளியேறி இருக்கலாம் என கருதப்பட்டது. இதனால், வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 3 பேர், சிறுத்தை பதுங்கி இருந்த இடத்தினருகே சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை அவர்களையும் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர். இதனால் சிறுத்தை தாக்கி 7 பேருக்கு தற்போது உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து, அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர், சிறுத்தையை கண்டறிந்து அதனை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் சிறுத்தை நுழைந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

x