கென்யா தேசத்தில் பட்டினி கிடப்பதன் மூலம் ஏசுவை சந்திக்கலாம் என்ற பாதிரியாரின் பேச்சை நம்பி செத்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து, தோண்டத்தோண்ட கிடைக்கும் சடலங்கள் அங்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
கென்யாவின் ஷகாஹோலோ வனப்பகுதியில் நடைபெற்று வரும் சடலங்களை தோண்டியெடுக்கும் பணியில், இது வரை 403 சடலங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் புதிய சடலங்களின் எண்ணிக்கை 12 ஆகும்.
ஆன்மிகம், மத நம்பிக்கை மற்றும் வழிபாடுகளின் பெயரில் மூட நம்பிக்கைகளை விதைத்து மக்களை ஏமாற்றுவோர் சகல மதங்களிலும் உண்டு. அப்படி கென்யா தேசத்தில் பால் மெக்கன்சி என்ற பாதிரியார், ’ஏசுவை சந்திக்கலாம் வாருங்கள்’ என்று மக்களை மூளைச் சலவை செய்வது குறித்து புகார்கள் எழுந்தன. ஒரு டாக்சி டிரைவராக இருந்த பால் மெக்கன்சி, தனது வாய்ஜாலம் மூலமாக கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு தேவாலயங்களை நிறுவி, விநோத மற்றும் விசித்திர வழிபாட்டு முறைகளை அறிமுகம் செய்தார்.
பாதிரியார் என்ற வகையில் பால் மெக்கன்சியின் கவர்ச்சிகரமான பேச்சை நம்புவோர் அதிகரித்தனர். அவர்கள் மத்தியில் ’பட்டினி கிடப்பதன் மூலம் ஏசுவை சந்திக்கலாம் வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார் மெக்கன்சி. வனப்பகுதி முகாமில் தங்கி அப்படி பட்டினி கிடந்தவர்கள் கொத்துக் கொத்தாய் செத்தனர். பட்டினி வேள்வியில் இருப்பவர்கள் தப்பிச் செல்லாதிருக்க 16 பேர் அடங்கிய ஆயுதக் குழுவும் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தது. பட்டினிக்கு உடன்படாத சிறார்கள் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்படி வனப்பகுதியில் புதைக்கப்பட்ட சடலங்கள் கடந்த ஏப்ரலில் தோண்டியெடுக்கப்பட்ட போது உலகம் அதிர்ந்தது. தொடரும் அகழ்வு நடவடிக்கைகளில் தற்போது 12 சடலங்கள் அடையாளம் காணப்பட்டதில், சடலங்களின் எண்ணிக்கை 403 என்பதாக உயர்ந்துள்ளது.
7 குழந்தைகளின் தந்தையான பால் மெக்கன்சி மீது பயங்கரவாதம், சட்டவிரோத பணமாற்றம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. தற்போது பால் மெக்கன்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதும், அவரை பின்பற்றுவோர் அடங்கியபாடில்லை.
பட்டினி மூலம் கடவுளைக் காணும் முயற்சியில் ஈடுபட்ட 65 பேர் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 5 கோடி மக்கள் தொகை கொண்ட கென்யா தேசத்தில் பதிவு செய்யப்பட்ட தேவாலயங்களின் எண்ணிக்கை மட்டுமே 4 ஆயிரத்துக்கும் மேலாக உள்ளன. அவற்றின் பின்னணி குறித்து ஆராய கென்ய அரசு தற்போது தலைப்பட்டுள்ளது.