உத்தராகண்டில் நகைக்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் பட்டப்பகலில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் 23வது நிறுவன நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை புரிந்திருந்தனர். இதனால் தலைநகர் டேராடூனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராஜ்பூர் சாலையில் உள்ள ரிலையன்ஸ் நகைக்கடையில், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகல் நேரத்தில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிகளுடன் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கு வேலை செய்பவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களில் 2 பேரை வெளியே பாதுகாப்பிற்காக நிற்க வைத்துக்கொண்டு மற்றவர்கள் கடைக்குள் நகைகளைத் திருடிச் சென்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும், துப்பாக்கி முனையில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகள் மற்றும் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...