18 வயது சிறுவனிடம் இருந்து ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பறித்து சென்ற காவலர் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவரை சஸ்பெண்ட் நீக்கம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் கடந்த 5ம் தேதி தனது நண்பர் நதீம்(21) என்பவருடன் ஓட்டேரி பகுதியில் உள்ள செங்கை சிவம் பாலத்தில் நின்று தனது ஆப்பிள் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காவலர் உடை அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சிறுவனிடம் இங்கு வீடியோ எடுக்கக்கூடாது எனக் கூறிவிட்டு அவரது கையில் இருந்த ஆப்பிள் போனை பறித்துச் சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்த காவலர் சிறுவனிடம் அவரது ஆப்பிள் போனை கொடுத்து விட்டு அவர் கையில் கட்டி இருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சை பிடுங்கி தான் கட்டி பார்த்துவிட்டு தருவதாகவும் சிறிது நேரம் கழித்து மேட்டுப்பாளையம் சந்திப்பில் உள்ள போலீஸ் பூர்த்திற்கு வந்து வாட்ச்சை பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து சிறுவன் தனது நண்பருடன் மேட்டுப்பாளையம் சந்திப்பில் உள்ள போலீஸ் பூர்த்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சம்பந்தப்பட்ட காவலர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து உடனே இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஓட்டேரி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் விமல் (29) என்பவர் சிறுவனிடம் இருந்து ஸ்மார்ட் வாட்ச்சை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விமல் தற்போது சென்னை புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் தங்கி ஓட்டேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அது மட்டுமின்றி சம்பவத்தன்று அதிகாரிகள் விமலை செம்பியம் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் தீமிதி திருவிழா பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைத்ததும், ஆனால் அவர் அங்கு பணிக்கு செல்லாமல் வெளியே ஊர் சுற்றி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆய்வாளர் உத்தரவின் பேரில் அன்றைய தினம் காவலர் விமலுக்கு வருகை பதிவேட்டில் ஆஃப்சென்ட் போடப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே காவலர் விமல் சம்பவத்தன்று தான் பணியில் இருந்ததாகவும் ஆனால் காவல் நிலையத்தில் ஆஃப்சென்ட் போட்டுவிட்டதாகவும் மேலும் நான் ஒரு நபரிடம் ஸ்மார்ட் வாட்ச்சை பறித்து சென்றதாக தவறுதலாக குறிப்பிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறு என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது எனக் கூறி வாய்ஸ் மெசேஜ் ஒன்றை ஆய்வாளருக்கு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே ஆய்வாளர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் புளியந்தோப்பு துணை ஆணையர், காவலர் விமலிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விமல் சிறுவனிடம் ஸ்மார்ட் வாட்ச் பறித்து சென்றது உறுதியானது. இதனை தொடர்ந்து துணை ஆணையர் உத்தரவின் பேரில் விமல் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து விமலை சஸ்பெண்ட் நீக்கம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டார்.