அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியவர் பாலகுருசாமி. பணி ஓய்வுக்கு பிறகு, வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அப்போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் பணம் பெற்றுக்கொண்டு துணைவேந்தர் மற்றும் ஊழியர்களை நியமிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வார இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு எதிராக 2020-ம் ஆண்டு அன்பழகன் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
ஒரு அமைச்சராக பேராசிரியர்கள் நியமனத்தில் தனக்குப் பங்கு இல்லை என்பது தெரிந்தே, முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, தன்னைப் பற்றி அவதூறு கருத்து கூறியுள்ளதாக, அன்பழகன் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பாலகுருசாமி மற்றும் தன் கருத்தை அறியாமல் செய்தி வெளியிட்ட வார இதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ”மனுதாரரின் பேட்டியைக் கருத்து சுதந்திரம் என எடுத்துக் கொள்ள முடியாது. அந்த கருத்துக்கள் நியாயமான விமர்சனம் என சாட்சியங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் கிழமை நீதிமன்றங்களில் நிரூபிக்க வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!