வேறு மத மாணவனைக் காதலித்ததால் ஆத்திரம்: ராடால் தாக்கி விஷம் கொடுத்து மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை!


ஃபாத்திமா, அவரது தந்தை அபீஸ் முகமது

கேரளாவில் வேற்று மத மாணவனுடம் பழகிய 14 வயது மகளை இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி, பூச்சி மருந்தை வாயில் ஊற்றி கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் அபீஸ் முகமது(43). இவர் கொச்சியில் உள்ள வல்லார்படம் துறைமுகத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஃபாத்திமா(14) ஆலுவா பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

இந்நிலையில், அதே பள்ளியில் பயிலும் 16 வயதான வேற்று மத மாணவர் ஒருவருடன், ஃபாத்திமாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இதுகுறித்து, அறிந்த அபீஸ் தனது மகளை கண்டித்ததாக தெரிகிறது. ஆனாலும், ஃபாத்திமா ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார். இதையடுத்து, மகளின் செல்போனை அபீஸ் உடைத்து போட்டுள்ளார். ஆனாலும், மகள் வேறு ஒரு போனில் காதலனுடன் பேசி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இதனைக் கண்டுபிடித்த அபீஸ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். இதுதொடர்பாக, கடந்த அக்டோபர் 29-ம் தேதி மகளுக்கும், அவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றியதில் மதியிழந்த அபீஸ் வீட்டில் இருந்த இரும்பு ராடால் மகள் ஃபாத்திமாவை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், வாயில் பூச்சி மருந்தையும் ஊற்றியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் சிறுமியின் அருகில் இருந்து பார்த்த தாய், கணவரை தடுத்து மகளை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு வாரமாக உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஃபாத்திமா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தந்தை அபீஸ் முகமதுவை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x