குன்னூர் அருகே தனியார் பள்ளிப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பிலிப்ஸ், பிரியா தம்பதிகளுக்கு ரோஷன், ராகுல் என்ற இரு மகன்கள் இருந்தனர். ரோஷன், குன்னூர் அருகே உள்ள பேரக்ஸ் சூசையப்பர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இன்று காலை பள்ளி செல்வதற்காக டூவீலரில் ரோஷன் பள்ளிக்குக் கிளம்பினார்.
குன்னூர் அருகே உள்ள பந்திமை பகுதி அருகே வந்தபோது எதிரில் வந்த தனியார் பள்ளிப் பேருந்து ரோஷன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் ரோஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வெலிங்டன் காவல்துறையினர், ரோஷனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவனின் சடலத்தைக் கண்டு உறவினர்களும், பெற்றோரும் கதறியழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!