எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல் வெட்டிக்கொலை: பெண் வக்கீல் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை!


கொலை செய்யப்பட்ட வக்கீல் ஸ்டாலின்

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் வழக்கறிஞர் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

எழும்பூர் நீதிமன்றம்

புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின்(38). இவர் குடும்பத்தாருடன் புதுச்சேரியில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஸ்டாலின் மட்டும் குடிபெயர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகர் இரண்டாவது தெருவில் வசித்து வந்தார். மேலும் ஸ்டாலின் வில்லிவாக்கம், ஜி.கே.எம். காலனியில் அலுவலகம் வைத்து எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2015 ஜனவரி மாதம் எழும்பூர் நீதிமன்ற வக்கீல் சங்கத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது .அதில் போட்டியிட்டு வழக்கறிஞர் சந்தன் பாபு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கொலை

அப்போது சந்தன்பாபு ஆதரவாளர்களுக்கும், எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த மைக்கேல் ஆதரவாளர்களும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் ஓருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அதில் மைக்கேல் ஆதரவாளர்கள் வெட்டியதில் வழக்கறிஞர் ஸ்டாலின் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வழக்கறிஞர்கள் ராஜேஷ், சார்லஸ், யோகேஸ்வரி, மைக்கேல், நரேஷ் குமார் உள்ளிட்ட 17 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இவ்வழக்கில் எழும்பூர் முதலாம் அமர்வு நீதிபதி லிங்கேஷ்வரன் தீர்ப்பு வழங்கினார்.

அதில் முதல் குற்றவாளியான மைக்கேல், நான்காவது குற்றவாளியான நடராஜ் மரண அடைந்து விட்டதால் அவர்களுக்கு எதிரான குற்றசாட்டுக்கள் கைவிடப்படுவதாகவும், இரண்டாவது குற்றவாளியான பெண் வழக்கறிஞர் லோகேஸ்வரி என்ற ஈஸ்வரி மற்றும் மூன்றாவது குற்றவாளியான சார்லஸ் ஆகிய இருவருக்கு எதிரான கொலை வழக்கு உள்ளிட்ட குற்றசாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறை

எனவே ,இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு எதிரான குற்றசாட்டுக்கள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. எனவே குற்றசாட்டுக்கள் பலனை எதிரிகளுக்கு அளித்து அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

x