நாகர்கோவில்: நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவரை போக்சோ சட்டத்தில் போலீஸார் இன்று கைது செய்தனர்.
நாகர்கோவிலில் கோணத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் 1,200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, அங்கு ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜஸ்தானை சேர்ந்த ராமச்சந்திர சோனி என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அவரை எச்சரித்த பின்னரும் மீண்டும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் அந்த ஆசிரியர் மீது புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஆசிரியர் ராமச்சந்திர சோனியை இன்று கைது செய்து, போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மற்ற மாணவிகள் யாருக்கேனும் இதுபோல பாலியல் தொல்லை கொடுத்தாரா எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.