அதிர்ச்சி! தூங்கி எழுந்து வெளியே வந்த பெண்; மின்கம்பி அறுந்து விழுந்து பலி


சோழவரத்தில் மின்சார கம்பி அறுந்து விழுந்து பெண் பலியானார். தூங்கி எழுந்து வெளியே வந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த சோழவரம் எல்ஜி நகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மேரி (57). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மேரி தனது கணவர் கன்னியப்பனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த மேரி இன்று காலை தூங்கி எழுந்து வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்புறத்தில் இருந்த மின்சார கம்பி திடீரென அறுந்து மேரி மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து சோழவரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் மின்வாரிய ஊழியர்கள் உதவியோடு மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு மேரியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூங்கி எழுந்து வெளியே வந்த பெண் மின்சார கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x