நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சர்வீஸுக்கு விட வந்த காரில் பதுங்கி இருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அவ்வப்போது கொடிய விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் இதர வகை பாம்புகள் உள்ளே சென்று பதுங்கி கொள்வது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களின் போது பாம்பு பிடிக்க பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் வனத்துறையினர் அல்லது தீயணைப்பு துறையினர் பாம்புகளை பத்திரமாக மீட்டு வனத்தில் விடுவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் டாடா டியாகோ கார் ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கார் அவ்வப்போது பழுதடைந்து வந்ததால், காரை சர்வீஸ் சென்டரில் விட அவர் முடிவு செய்தார். இதன்படி தெற்கு வள்ளியூரில் உள்ள டெரிக் டாட்டா கார் ஷோரூமிற்கு அந்த காரை எடுத்து வந்து அவர் விட்டுள்ளார். வழக்கம்போல் ஊழியர்கள் சர்வீஸ் செய்வதற்காக கார் பானெட்டை திறந்த போது, உள்ளே மிகப்பெரிய பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரின் உள்ளே பார்த்தபோது அது மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பத்திரமாக பானெட்டில் இருந்து மீட்டனர். அது ராக் பைத்தான் வகை மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாம்பை வனத்துறையினரிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த பாம்பை பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தனர்.
இதனிடையே குடியிருப்பு பகுதிகள் அதிகம் நிறைந்த பகுதியில் மலைப்பாம்பு எவ்வாறு வந்தது என்கிற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபநாசம் பகுதிக்கு காரின் உரிமையாளரான பழனி, காரில் சென்று இருந்தது தெரியவந்தது. அப்போது மலைப்பாம்பு அங்கிருந்த காருக்குள் பதுங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...