கேரள மாநிலம் கண்ணூர் அருகே கம்பி வேலியில் சிக்கிய புலியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். தொடர்ந்து புலிகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளின் அருகே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலிகள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்டவை அதிக அளவில் குடியிருப்புகளுக்கு பகுதிகளின் அருகே சுற்றித் திரிகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் விவசாயி ஒருவரை புலி ஒன்று அடித்துக் கொன்று சாப்பிட்டது. இதையடுத்து பொது மக்களின் தொடர் போராட்டங்களால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலி தற்போது திருச்சூர் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதே போல் கடந்த வாரம் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து டிராக்டர் ஓட்டுநர் ஒருவரை மிதித்து கொன்றது. தொடர்ந்து வனவிலங்குகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கண்ணூர் அருகே உள்ள கொட்டியூர் பகுதியில் இன்று காலை ரப்பர் தோட்டம் ஒன்றிற்கு சிபி என்பவர் சென்றபோது, அங்கிருந்த இரும்பு கம்பி வேலியில் புலி ஒன்று சிக்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி இரும்பு வேலியில் இருந்து பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து கூண்டில் புலியை அடைத்துள்ள வனத்துறையினர், அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளின் அருகே புலிகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் தோட்டங்களுக்கு செல்லும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...