சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்: பெண் உள்பட இருவருக்கு 10 ஆண்டு சிறை!


சித்ராதேவி, தஸ்தகீர்,

சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆண்,பெண் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்ராதேவி (46), தஸ்தகீர் (39). இவர்கள் இருவரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், சித்ரா தேவி மற்றும் தஸ்தகீரிடம் 18 வயதிற்கு கீழுள்ள சிறுமியைப் பாலியலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து திருவொற்றியூரில் தனியாக வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து, 18 வயதிற்கு உட்பட்ட 2 சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்த சிபிசிஐடி போலீஸார் சித்ராதேவி, தஸ்தகீர் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 2021-ல் உடல்நலக்குறைவு காரணமாக திருநாவுக்கரசு உயிரிழந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கே.அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சுபத்ரா தேவி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாலியல் தொழில் நடத்துவதற்கு ஒரு வீட்டை பயன்படுத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

சிறை

மற்றும் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் மூன்றரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்த நீதிபதி சித்ராதேவி மற்றும் தஸ்தகீர் ஆகிய இருவருக்கும் தலா ரூ.7 ஆயிரம் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 20 மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இவை அனைத்தையும் ஏக காலத்தில் (10 ஆண்டுகளில்) அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. தீர்ப்புக்குப் பின் இருவரையும் போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x