உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சட்டவிரோத மதரஸா மற்றும் மசூதி ஆகியவை இடிக்கப்பட்ட இடத்தில் காவல் நிலையம் அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் வன்முறையில் ஈடுபடுவோருக்கான செய்தி பகிரப்படுவதாகவும், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம், ஹல்த்வானியில் ஆக்கிரமிப்பு இடத்தில் அமைந்திருந்த சட்டவிரோத மதரஸா மற்றும் மசூதி ஆகியவை நீதிமன்ற உத்தரவின்பேரில் பிப்.8 அன்று இடிக்கப்பட்டன. அப்போது ஹல்த்வானி, வான்புல்புரா பகுதியை சேர்ந்தோர் எதிர்ப்பு தெரிவித்ததில், அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதில் 100க்கும் மேலான போலீஸார் காயமடைந்தனர். கல்வீச்சு மற்றும் தீக்கிரை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களால் மேலும் அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் இந்த மோதலில் பாதிக்கப்பட்டனர். வன்முறை சம்பவத்தால் 5 பேர் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக சுமார் 500 பேர் காயமடைந்தனர். வன்முறையை அடக்க கூடுதல் போலீஸார் மற்றும் மத்திய படைகள் அங்கே குவிக்கப்பட்டன. ஹல்த்வானி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடைகள், பள்ளிகள் மூடப்பட்டு, இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டது.
முன்னதாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை தடுக்கக் கோரும், பொதுநல வழக்கு உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்ததில், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தொடங்கியது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் நாளை மறுநாள் (பிப்.14) நடைபெற உள்ள சூழலில், அந்த இடம் தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அதன்படி ஹல்த்வானியின் பன்புல்புராவில் சட்டவிரோத மதரஸா இடித்துத் தள்ளப்பட்ட இடத்தில் காவல் நிலையம் கட்டப்படும் என்றும், இதன் மூலம் அங்கு வெடித்த வன்முறையில் பங்கேற்ற குற்றவாளிகளுக்கு இது ஒரு தெளிவான செய்தியை அனுப்பும் என்றும் முதல்வர் தாமி தெரிவித்துள்ளார்.
”அமைதியை சீர்குலைப்பவர்கள், குழப்பம் விளைவிப்பவர்கள் மற்றும் தூண்டிவிடுபவர்களுக்கும் உத்தராகண்ட் அரசாங்கத்தின் பதில் இதுதான். இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு உத்தரகாண்ட் அரசு சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ளாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.