சேலம் அருகே கோயில் திருவிழாவின் போது, பட்டாசு வெடித்த விபத்தில், சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியில் குழி இருசாயி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக இன்று காலை வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதற்காக இடைப்பாடி இளவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (26) என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பட்டாசு வைத்திருந்தார். அப்போது வானத்தில் வெடித்து சிதறிய தீப்பொறி ஒன்று இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசு பாக்சின் மீது பட்டு வெடித்து சிறியது.
இதில் இருசக்கர வாகனத்தின் மீது உட்கார்ந்து இருந்த சக்திவேலுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அதேபோல் திருவிழாவை பார்க்க வந்திருந்த ஓமலூர் கமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கவின் (9) என்பவரும் படுகாயமடைந்தார். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது பட்டாசு வெடி விபத்தில் தீக்காயமடைந்த இருவருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இரும்பாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கவினுக்கு 75 சதவீதம் அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் சம்பவ இடத்தில் இருந்த போதும், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, வெடிவிபத்து நேர்ந்த போது பதிவான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!