பெண்களின் மொபைலுக்கு வந்த எஸ்.எம்.எஸ்; மெகா மோசடி அம்பலம்!


புகார் அளித்த பெண்கள்

திருப்பூரில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களின் செல்போன் எண்களை வைத்து நடைபெற்ற ஜி.எஸ்.டி மோசடி அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாதா, மாதம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்த நிலையில், 11 லட்சம் பேர் மேல்முறையீட்டு மனுக்களை அளித்துள்ளனர். அவற்றை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூரில் சாயப்பட்டறையில் வேலைபார்க்கும் பெண்கள் ஜிஎஸ்டி கட்டிய காரணத்தால் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரளான பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், திருப்பூர் மாநகர சாயப்பட்டறை தெருவிலுள்ள பல பெண்களின் ஆதார், பான் விவரங்களை பயன்படுத்தி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்து அம்பலமானது.

மகளிர் உரிமைத் தொகை பெற்ற பெண்கள்

சாயப்பட்டறையில் பணியாற்றும் பெண்களின் விவரங்களை வைத்து, அவர்களின் பெயரில் பொய்யான நிறுவனங்களை சிலர் திருப்பூரில் உருவாக்கி உள்ளனர். இந்த நிறுவனங்களுக்காக ஜிஎஸ்டி கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது. இதன் மூலம் ஒரு சிலர் தனது கம்பெனி வருமானத்தை வேறு வேறு பான் கார்டுக்கு மாற்றி கணக்கு காட்டி மோசடி செய்துள்ளனர். கூடுதல் வரி செலுத்துவதை தவிர்க்க இப்படி முறைகேடு செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரங்கள் அனைத்தும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பெண்கள் பலர் ஜிஎஸ்டி செலுத்தியதாக பான்கார்டு விவரம் தெரிவித்தது. ஜிஎஸ்டி செலுத்தியதால் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்ததால் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். விரைவில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

2023 கிரிக்கெட் : சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள்... டாப் லிஸ்ட்டில் 3 இந்தியர்கள்!

x