பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த கோழி அருளை, ஓசூரில் வைத்து துப்பாக்கி முனையில், அம்பாசமுத்திரம் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் கோழி அருள் என்ற அருள்ராஜ். 50 வயதாகும் கோழி அருள், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர். அருள் மீது 20-க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் மீது அம்பாசமுத்திரம் போலீஸார் பதிந்த வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருளை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், அருள் ஓசூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் விரைந்த அம்பை போலீஸார், அங்கே பதுங்கி இருந்த அருளை துப்பாக்கி முனையில் நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருளை நீதிமன்றத்தில் ஆஜர்படுதுவதற்காக போலீஸார் அம்பை அழைத்து வந்தனர்.