வயநாட்டில் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட மக்னா யானை, வீட்டின் கதவை உடைத்து ஒருவரை மிதித்து கொன்றதோடு, வீடு ஒன்றையும் இடித்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது வனவிலங்குகள் தாக்கி பொதுமக்கள் காயமடையும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
வயநாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, புலி ஒன்று விவசாயி ஒருவரை தாக்கிக் கொன்று, அவரது உடலை பாதி தின்றுவிட்டு தப்பியோடியது. இதையடுத்து அந்த புலியை வனத்துறையினர் மயக்கம் ஊசி செலுத்தி பிடித்து, திருச்சூர் உயிரியல் பூங்காவில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே தொடர்ந்து யானைகள் மற்றும் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலை வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றி திரிந்ததால், மக்னா யானை ஒன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதையடுத்து யானைக்கு ரேடியோ காலர் பொருத்திய வனத்துறை அதிகாரிகள், அதனை மீண்டும் பந்திப்பூர் வனப்பகுதியில் விடுவித்தனர். தொடர்ந்து அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் இருந்து கேரளாவின் வயநாடு பகுதிக்கு வந்த இந்த யானை, அங்கு சுற்றித்திரிந்து வந்தது. இதையடுத்து கேரள மாநில வனத்துறையினர் இதை யானையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை வயநாடு பகுதியில் உள்ள மணந்தவாடி மாநகராட்சி பகுதியில் இந்த யானை சுற்றித் திரிந்தது. யானையின் நடமாட்டத்தைக் கண்ட பொதுமக்கள், அங்கிருந்து திசைக்கொருவராய் தப்பி ஓடினர்.
அப்போது 42 வயது டிராக்டர் ஓட்டுநரான அஜி பணஞ்சியில் என்பவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர், யானை எதிரில் வருவதை கண்டு, அதிர்ச்சியில் அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி உள்ளே குதித்து தப்பிக்க முயன்றனர்.
ஆனால், வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த யானை, அஜியை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இதே மக்னா யானை, அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றையும் இடித்து சேதப்படுத்தியது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டிருந்த போதும், அதனை முறையாக வனத்துறையினர் கண்காணிக்க தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் காரணமாகவே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானை தாக்கி இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!
அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!
கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!
தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!