மேற்கு வங்கத்தில் ரூப்நாராயண் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம், பெல்காச்சியா, ஷிப்பூர் மற்றும் பாக்னான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 பேர் கொண்ட குழு, மேற்கு மெடினிபூர் மாவட்டத்தின் தாஸ்பூரில் உள்ள திரிப்பேனி பூங்காவுக்கு சுற்றுலா வந்தனர்.
நேற்று இரவு அவர்கள் வீடு திரும்புவதற்காக ரூப்நாராயண் ஆற்றில் படகில் பயணித்தனர். அப்போது அவர்கள் சென்ற படகு எதிர்பாராதவிதமாக நடு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, மற்ற படகு ஓட்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலரை மீட்டனர்.
ஆனால், நீரில் மூழ்கியவர்களில் 5 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விபத்து நடந்த பகுதிக்கு 2 பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து மீட்கப்பட்டவர் களில் சிலர் அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாதி பங்காலியா தலைமையிலான போலீஸார் மீட்பு பணிகளுக்கு உதவி வருகின்றனர்.
குஜராத்தில் வதோதராவில் கடந்த மாதம் 18-ம் தேதி ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 12 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்துக்குள்ளாக மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு படகு விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.