தமிழக அரசு அதிரடி... பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு!


சேலம் பெரியார் பல்கலைகழக பதிவாளர் தங்கவேல்

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சில ஆண்டுகளாகவே சர்ச்சைகள் சுற்றி சுழன்று வருகின்றன. குறிப்பாக, துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் நிதி முறைகேடு விவகாரம் தொடர்பாக ஜெகநாதனை சேலம் போலீஸார் கைது செய்தது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரும் நேரடியாகவே பல்கலைக்கழகத்துக்கு வந்து விசாரணை நடத்தியதும் சர்ச்சையானது.

சேலம் பெரியார் பல்கலைகழகம்

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பதிவாளர் தங்கவேல் மீதும் தொடர் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வந்தது. முதுகலை கணித பாடத்தில் பட்டம் பெற்ற தங்கவேல், கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டதும் பெரும் சர்ச்சைையானது. இது தொடர்பாக ஆண்டு தோறும் தணிக்கை குழுவினர் அவரது நியமனத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பதிவாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்ட பிறகு, பல்வேறு நிதி முறைகேடுகளில் தங்கவேல் ஈடுபட்டதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன்

குறிப்பாக, பட்டியலின இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 2 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு, கணினி மையம் கணினி அறிவியல் துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு, பல்கலைக்கழக அலுவலகங்களை கணினி மயமாக்கியதில் பல லட்சம் முறைகேடு என பதிவாளர் தங்கவேல் மீது ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

பதிவாளர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 2022 டிசம்பரில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி, இணைச் செயலாளர் ஹென்றி தாஸ் இளங்கோ ஆகியோர் அடங்கிய இரு நபர் குழுவை அமைத்தது அரசு.

தமிழ்நாடு அரசு

இந்த குழுவினர் கடந்த ஓராண்டுக்கு மேலாக தொடர் விசாரணை மேற்கொண்டனர். புகார்தாரர்களை பலமுறை நேரில் அழைத்தும் ஆதாரங்களை சேகரித்தனர். முழு விசாரணைக்கு பின்னர், பழனிசாமி குழு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பதிவாளர் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பதிவாளர் தங்கவேல் இன்னும் சில நாட்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது பணி ஓய்வை நிறுத்தி வைத்து பணியிடை நீக்கம் செய்யுமாறு உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x