காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மனைவிக்கு கைது வாரண்ட்... அரசு நிதி முறைகேடு வழக்கில் கிடுக்கிப்பிடி


மனைவி லூயிஸ் உடன் சல்மான் குரேஷி

அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித் என்பவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித், சோனியா - ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கலகக்குரல் கொடுத்ததில் தற்போது ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இவரது மனைவியான லூயிஸ் குர்ஷித்துக்கு எதிராக, அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் அமைந்துள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் இன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

லூயிஸ் குரேஷி

2010-ல் லூயிஸ் குர்ஷித்தின் ’டாக்டர் ஜாகிர் ஹுசைன் நினைவு அறக்கட்டளை’ சார்பில், செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி, போஜிபுரா பகுதியில் நடத்தப்பட்டது. இதில் அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அது தொடர்பாக பின்னர் அரசு சார்பில் விசாரணைக்கும் உத்தரவானது. அந்த விசாரணையில் போலி முத்திரைகள் மற்றும் கையெழுத்துகளை பயன்படுத்தி அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக போஜிபுரா காவல் நிலையத்தில் 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சல்மான் குர்ஷித் மனைவி லூயிஸ் குர்ஷித் மற்றும் டிரஸ்டின் செயலர் முகமது அதர் ஃபரூக்கி என இருவருக்கும் எதிராக போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பரேலியில் உள்ள எம்பி-எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது.

நீதிமன்ற உத்தரவு

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் விசாரணையின் போது ஆஜராகும்படி நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை மற்றும் வழக்கில் ஜாமீன் பெறவும் முயற்சிக்கவில்லை. இதனையடுத்து லூயிஸ் குர்ஷித் மற்றும் முகமது அதர் ஃபரூக்கி ஆகியோரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான கைது வாரண்ட்டை இன்று பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை பிப்.16-க்கு ஒத்தி வைத்தது.

இதையும் வாசிக்கலாமே...

x