திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை அர்ச்சகர் திருடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுவராயிலை அடுத்துள்ளது திருவேற்காடு. இங்கு பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றான வேதபுரீஸ்வரர் கோயிலும், பக்தர்களுடைய மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலும் உள்ளது.
அம்மன் ஆலயங்களில் சக்திவாய்ந்த தலங்களாக போற்றப்படும் சமயபுரம், மேல்மலையனூர் கோயில்களுக்கு இணையாக இந்தக் கோயில் போற்றப்படுகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் இத்திருக்கோயில், தமிழக அரசின் அறநிலையத்துறையின் மேற்பார்வையின் கீழ் உள்ளது.
இந்நிலையில், கருவறையில் உள்ள உற்சவர் கருமாரியம்மன் சிலையில் இருந்த 8 சவரன் மதிப்புள்ள தாலிச் சங்கலி அண்மையில் மாயமாகிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட கோயில் நிர்வாகிகளும் பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கோயிலில் தின ஊதியத்தின் அடிப்படையில் அர்ச்சகராகப் பணியாற்றும் சண்முகம் என்பவர் அம்மன் தாலியை திருடியது தெரிய வந்ததாம். இதையடுத்து கோயில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரின் பேரில், திருவேற்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மன் கழுத்திலிருந்த தாலி திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இவ்வாறு நடக்காமல் இருக்க கோயில் நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.