தனது வளர்ப்பு நாயை லிப்டில் பெண் ஒருவர் அழைத்து வர முயன்ற போது, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சித்ரா ரஞ்சன். நேற்று தனது வளர்ப்பு நாயை வாக்கிங் கூட்டி செல்வதற்காக லிப்டில் அழைத்து செல்ல முயன்ற போது, அதற்கு அதே குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.பி.குப்தா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சித்ரா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது குப்தா அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில் சித்ரா குப்தாவின் போனை தட்டிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குப்தா, சித்ராவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நலச்சங்க நிர்வாகிகள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.