மகளைக் கோடாரியால் வெட்டி கொலை செய்த தாய்... காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம்!


கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய்.

காதல் உறவில் இருந்த தனது 15 மகளைக் கோடாரியால் வெட்டிக் கொலை உடலைக் கிணற்றில் வீசிவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கவுசாம்பி மாவட்டம், தேஜ்வாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபதி. தனது 15 வயது மகள் வயலுக்கு வேலைக்குச் சென்றவர் அக்.2-ம் தேதி முதல் காணவில்லை என்று அக்.14-ம் தேதி போலீஸில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களால் சிறுமி கடத்தப்பட்டதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அக்.26-ம் தேதி தேஜ்வாபூர் கிராமத்திற்கு வெளியே வயலில் உள்ள கிணற்றில் சிறுமியின் சடலம் மிதப்பதாக கிராம மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைப் பார்த்த சிவபதி, அந்த உடல் தனது மகளுடையது எனக்கூறி கதறி அழுதனர்.

இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தாய் சிவபதி மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரை நேற்று பிடித்து விசாரித்தனர். அப்போது தனது மகள், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் பழகுவதால், தனது குடும்பத்திற்கு கெட்டப் பெயர் வந்து விடும் எனக் கண்டித்துள்ளார். ஆனால், அதையும் மீறி சிறுமி அந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதனால் அவரை தனது இன்னொரு மைனர் மகள், மருமகள் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி கோடாரியால் வெட்டியும், தடியால் தாக்கியும் தனது மகளைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதாகவும், இதன் பின் காணாமல் போனதாக போலீஸில் புகார் அளித்ததாகவும் சிவபதி கூறினார். இதையடுத்து சிவபதி, அவரது மைனர் மகளையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். மருமகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

குடும்பத்தின் கவுரவத்தின் பெயரில் காதல் செய்த தனது மகளை தாயே மகளுடன் சேர்ந்து வெட்டி ஆணவப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x