அதிர்ச்சி... அரசுப் பள்ளி சமையல் அறையில் மனிதக்கழிவை பூசிய கொடூரம்!


அரசுப் பள்ளி சமையல் அறையில் மனிதக்கழிவை பூசிய கொடூரம்

மேட்டூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் அறையில் மனித கழிவுகள் பூசப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள காவேரிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் கடந்த 1950ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. இந்தப் பள்ளியை சுற்றி மதில் சுவர் இல்லாததால் விடுமுறை தினங்களில் சமூகவிரோதிகள் மற்றும் குடி மன்னர்கள் இங்கே வந்து மதுபானம் குடித்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் பள்ளிக்கு நேற்று விடுமுறை என்பதால் அங்கு வந்த மர்ம நபர்கள் முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையலறை சுவரில் மனிதக்கழிவை பூசிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை சமையலறைக்கு சென்ற ஊழியர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். ஆனால் அதிகாரிகள் மாலை 3 மணி வரை பள்ளிக்கு சென்று எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் ஊடகங்களில் செய்து வெளியான நிலையில் அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். பள்ளியின் சமையலறை சுவரில் மனிதக்கழிவு பூசிவிட்டுச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தை தொடர்ந்து மற்றும் ஒரு கொடூர நிகழ்வால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

x