நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை ஷெரினா. இவர் ‘வினோதய சித்தம்’ என்ற படத்திலும், பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர்.
இந்நிலையில் இவரது மேலாளர் கௌரி ஜெகநாதன் கடந்த மாதம் 20 தேதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகை ஷெரினாவுக்கு தொடச்சியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து பாலியல் ரீதியாகவும், ஆபாசமாகவும் பேசி வருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் அந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரித்த போது முன்பு நடிகையிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கார்த்திக் என்பது தெரியவந்ததாகவும், எனவே நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் அண்ணாசாலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை ஷெரினாவின் கார் ஓட்டுநரான திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் (24) மற்றும் அவரது கூட்டாளி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா (37) ஆகிய இருவரை மயிலாடுதுறையில் வைத்து போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் நடிகை ஷெரினா கார் ஓட்டுநர் கார்த்திக்கை சில பிரச்சினை காரணமாக வேலையில் இருந்து நீக்கியது, இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது கூட்டாளி இளையராஜா உடன் சேர்ந்து நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. அதுமட்டுமின்றி இருவரும் தொடர்ந்து நடிகைக்கு போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.