ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை, வீடியோகான் கடன் வழக்கில் சிபிஐ கைது செய்தது சட்ட விரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்தது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை பொறுப்பில் சந்தா கோச்சார் இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு, மறைமுகமாக பயனளிக்கும் வகையில் உதவியதாக புகாருக்கு ஆளானார். அந்த வழக்கில் சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டனர்.
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவராக சந்தா கோச்சார் இருந்தபோது, 2012-ல் பிரபல வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3250 கோடி கடனாக வழங்கச் செய்தார். இந்த கடன் வழங்கலில் வங்கியின் வழிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை எனப் பின்னர் குற்றச்சாட்டு எழுந்தது.
கடன் வாங்கத் தகுதி இல்லாத வீடியோகான் நிறுவனம், அப்படி வாங்கிய கடனில் குறிப்பிட்ட தொகையை வேறு இரு நிறுவனங்களுக்கு மாற்றி, சந்தா கோச்சாரின் கணவர் நடத்தும் நிறுவனத்துக்கு சேர வழி செய்தது. இவ்வாறு வீடியோகான் நிறுவனத்துக்கான கடன் பெயரில் கோச்சார் குடும்பம் பயன் அடைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து ஐசிஐசிஐ வங்கியின் இயக்குநர் குழுவால் சந்தா கோச்சார் பணி நீக்கம் செய்யப்பட்டார். வங்கி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தா கோச்சாரும், கடன் பெற்ற வீடியோகான் நிறுவனத்திடமிருந்து ரூ.64 கோடி பெற்ற வகையில் தீபக் கோச்சாரும் 2022-ம் ஆண்டின் இறுதியில் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைதுக்கு எதிராக சந்தா கோச்சார் - தீபக் கோச்சார் தம்பதி மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினர். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிபதிகள் அனுஜா பிரபுதேசாய் மற்றும் என்.ஆர்.போர்கர் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் அமர்வு, ஜனவரி 9 அன்று கோச்சார் தம்பதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை இன்று உறுதி செய்து உத்தரவிட்டது.
இருவரையும் சட்டப்படி சிபிஐ கைது செய்யப்படவில்லை என்ற அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மற்றபடி சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. மேலும் கோச்சார் தம்பதியினர் தங்களது பாஸ்போர்ட்டை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் வாசிக்கலாமே...
'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?
இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!