உத்தரபிரதேசத்தில் பள்ளி வேனும், கல்லூரி பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 4 மாணவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் படான் பகுதியில் சேஹா நாவிகஞ்ச் பகுதியில் இன்று கல்லூரி பேருந்து ஒன்றும், பள்ளி வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வேனை ஓட்டி வந்த ஓமேந்திரா (28) மற்றும் 4 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களில், குஷி (6), பருல் (9), ஹர்சித் (9) ஆகிய மூவரது உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்றொரு சிறுவனை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.