தும்கூரில் 3 மாத கர்ப்பிணி கொடூரக் கொலை... பெற்றோர் பரபரப்பு புகார்!


சௌமியா

தும்கூரில் மூன்று மாத கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதாக அவரது பெற்றோர் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தும்கூர்

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டம், சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் உள்ள பொம்மேனஹள்ளியைச் சேர்ந்தவர் சௌமியா(22). இவருக்கும் பிரசாத்(40) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தன்னை விட 18வயது மூத்தவரை திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று சௌமியா புகார் செய்து வந்துள்ளார்.

இதனால், பிரசாத்திற்கும், சௌமியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசி சுமூகமாக வாழுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சௌமியா இன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார், சௌமியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூன்று மாத கர்ப்பமாக இருந்த தங்களது மகளைக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று சௌமியாவின் பெற்றோர் புகார் கூறியுள்ளனர். சௌமியாவின் கணவர் பிரசாத் மற்றும் மாமனார் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து நோனாவினகெரே காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சௌமியா எப்படி உயிர் இழந்தார் என்பது தெரிய வரும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x