அமெரிக்காவின் டெலவரே நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடரும் துப்பாக்கிச்சூடுகளால், அந்நாட்டில் துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது.
உலகில் அதிக சதவீதம் மக்கள் சொந்த பயன்பாட்டிற்காக துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. மனஉளைச்சல் போன்ற காரணங்களால் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. மைனே மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராபர்ட் கார்டு என்பவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், டெலவரே நகரில் மர்ம நபர் நடத்தியுள்ள துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதோடு, இருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ள அந்நகர போலீஸார், நகர் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 556 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக, அந்நாட்டு குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ள அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.