சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேகத்தில் இயங்கக்கூடிய வந்தே பாரத் ரயில்களை சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வழக்கமான அதிவேக ரயில்களை காட்டிலும், கூடுதல் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில்களில் பயணிக்க கட்டணமும் அதிக அளவில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் விரைவான மற்றும் சொகுசு சேவை காரணமாக ஏராளமான ரயில் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே வந்தே பாரத் ரயில் மீது ஆங்காங்கே கல்வீச்சு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது சென்னை-கோவை, சென்னை-மைசூர், சென்னை-நெல்லை மற்றும் கோவை-பெங்களூரு என 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் இருந்து நேற்று மதியம் 2:50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு கிளம்பியது. இந்த ரயில் இரவு 10:30 மணி அளவில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகே சென்ற போது, தண்டவாளத்தின் அருகே நின்றிருந்த மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 9 பெட்டிகளில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தை ரயில், வந்தடைந்தவுடன் போலீஸார் உடனடியாக ரயிலில் ஏறி சோதனை நடத்தினர். மேலும் உடைந்து சிதறிய கண்ணாடி பாகங்களையும் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், கல்வீசி தாக்கிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பெட்டிகள் சேதமடைந்தபோதும், ரயில் சேவையில் பாதிப்பில்லை என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல் இன்று காலை 6:00 மணிக்கு நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.