‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை... மகன் வெறிச்செயல்!


மூதாட்டி காசம்மாள்

உசிலம்பட்டி அருகே மது அருந்தப் பணம் தர மறுத்த ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை, அவரின் மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட நாமகோடி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரைச் சேர்ந்தவர் பால்சாமி மனைவி காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான இவர் 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார். இவருக்கு நாமகோடி, தனிக்கொடி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் மூத்த மகன் நாமகோடி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கடந்த 15 ஆண்டுகளாகத் தாயுடன் வசித்து வருகிறார். மது போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மது அருந்தப் பணம் கேட்டு தாய் காசம்மாளுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.

கடைசி விவசாயி படத்தில் காசம்மாள்

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பி வழக்கம் போல மது அருந்தப் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பணம் தர மறுத்த தாய் காசம்மாளை கட்டையால் தாக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் தலைப் பகுதியில் பலத்த காயமடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த காசம்மாளைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

உசிலம்பட்டி மருத்துவமனை

விரைந்து சென்ற உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீஸார் காசம்மாளின் சடலத்தை மீட்டு உடற் கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் நாமகோடியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது அருந்தப் பணம் தர மறுத்த தாயை மகன் கட்டையால் அடித்துப் படுகொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x