சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சொத்து தகராறு காரணமாக அண்ணனின் கடையைத் தம்பியே உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் ரத்னா எலக்ட்ரிகல்ஸ் மற்றும் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவரது தம்பி ஜான்சன் அதே பகுதியில் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இருவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்சினை இருந்து வருதோடு, அதுதொடர்பாக, வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் ராஜசேகரன் கடையை மூடி சென்ற நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது அவரது கடையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.
இதைக்கண்டு, அதிர்ச்சியடைந்த அவர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தன் சொந்த தம்பியான ஜான்சனே கொள்ளைக் கும்பல் ஒன்றின் உதவியோடு கடையை உடைத்து உள்ளே நுழைந்ததுடன் கடையில் இருந்த 2.5 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்க பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜசேகரன் சிசிடிவி காட்சிகளுடன் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் இருந்து நூறு மீட்டர் தூரத்தில் உள்ள கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.