போதையில் வன்முறை... போலீஸ்காரரை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் கைது!


காவலர் மீது தாக்குதல்

சென்னை அம்பத்தூரில் வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள பட்டரவாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டபோது வடமாநில தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பலர் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

காவலர் மீது தாக்குதல்

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக வடமாநில தொழிலாளர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மாறிமாறி கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவலர் ரகுபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். அங்கு கூடியிருந்த வடமாநில தொழிலாளர்களைக் கண்டித்துள்ளார்.

அப்போது வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் காவலர் ரகுபதியை திடீரென சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் தலையில் பலமாக அடிபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் கூடுதல் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்றதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.

இதையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் ரகுபதியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. காவலர் ரகுபதி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிசிடிவி காட்சிகள் மூலம் தாக்கிய நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காவலர் ரகுபதி மீது தாக்குதல் நடத்திய வட மாநில தொழிலாளர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் ரகுபதி தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x