வங்கிக்குச் சென்றவர்களை வழிமறித்த கார்... போலீஸ் உடையில் வந்து ரூ.18.5 லட்சம் கொள்ளை!


ஹைதராபாத் காவல் துறை.

ஹைதராபாத்தில் போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி காரில் வந்து 18.5 லட்ச ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மெஹதிப்பட்டினம்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மெஹதிப்பட்டினத்தில் சிமன்லால் சுரேஷ் குமார் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு பணிபுரியும் அக்சய், 20 லட்ச ரூபாயை பரோடா பஞ்சாகுட்டா கிளையில் டெபாசிட் செய்யுமாறு நிறுவன ஊழியர் பிரதீப் சர்மாவிடம் கொடுத்துள்ளார். பிரதீப் தனது அலுவலக ஓட்டுநர் சங்கருடன் நேற்று இரவு 9.15 மணியளவில் தாஜ் கிருஷ்ணா சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த காரை ஒரு கார் வழிமறித்தது. அதில் காவல் துறை அதிகாரிகளைப் போல சீருடையில் இருந்தவர்கள் இருந்தனர். உங்கள் காரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியதுடன் பிரதீப் கொண்டு சென்ற பணம் மற்றும் அதற்கான ஆதாரம் குறித்து விசாரித்தனர். ஆனால், அவர் வங்கியில் டெபாசிட் செய்ய பணத்தைக் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார். இதையடுத்து 20 லட்ச ரூபாய் வைத்திருந்த பையை பறிமுதல் செய்த அவர்கள், பிரதீப்பை மிரட்டி தங்களுடன் காரில் அமரச் சொல்லியுள்ளனர்.

சிறிது தூரம் கார் சென்றதும், ஹைதராபாத் மெட்ரோ அருகே பிரதீப்பிடம் பையைத் திருப்பிக் கொடுத்து விட்டு அவர்கள் சென்று விட்டனர்.

இதன்பின் பிரதீப் பையைப் பிரித்துப் பார்த்த போது, அதில் 1.5 லட்ச ரூபாய் மட்டுமே இருந்தது. அதில் இருந்த 18.5 லட்ச ரூபாய் காணாமல் போய் இருந்தது. போலீஸ் என்ற பெயரில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை உணர்ந்த பிரதீப், இச்சம்பவம் குறித்து பஞ்சாகுட்டா போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸார் எனக்கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.18.5 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x