அதிர்ச்சி... திடீரென பற்றி எரிந்த வீடு; 5 நாய் குட்டிகள் தீயில் கருகி பலி!


சென்னையில் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 நாய் குட்டிகள் தீயில் கருகி பலியானது.

சென்னை மேற்கு சைதாப்பேட்டை துரைசாமி கார்டன் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பத்மாவதி (42). இவரது கணவர் மகேந்திர பூபதி காலமானதை அடுத்து இவர் தனது மகன், மகளுடன் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

மேலும் பத்மாவதி செல்லப் பிராணியான நாய் குட்டிகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இரண்டு அடுக்கு கொண்ட வீட்டில் பத்மாவதி தரைதளத்தில் மகன், மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு 11 மணி அளவில் பத்மாவதி மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டில் தீப்பிடித்து கரும்புகை சூழ்ந்தது.

உடனே பத்மாவதி சுதாரித்துக் கொண்டு வீட்டில் இருந்த சிலிண்டரை மூடிவிட்டு தனது மகன், மகளுடன் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்துள்ளார். அவர் வெளியே வந்த சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவியது. உடனே பத்மாவதி இது குறித்து தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் கிண்டி, அசோக் நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பத்மாவதி விற்பனைக்காக வளர்த்து வந்த ஐந்து நாய்க்குட்டிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. தீ விபத்தில் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் சாம்பலானது.

இந்த தீ விபத்து குறித்து சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 நாய் குட்டிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?

x