மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... புது மாப்பிள்ளை திருமணத்திற்கு முன்பு கைது!


வைரவன்

ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரியின் லேப் டெக்னீசியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இதுபோக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான டாக்டர்களும், பயிற்சி டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு பணியாற்றி வரும் 35 வயது பெண் டாக்டர் ஒருவருக்கு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி ஆண்டனி சுரேஷின் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 22ம் தேதி அவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே அங்கு படிக்கும் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு லேப் டெக்னீசியன் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் இரண்டு பேர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திற்கு இணையதளம் மூலமாக தனித்தனியாக மனு அனுப்பியதை அடுத்து ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வரும் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த வைரவன் என்பவர் மீது கோட்டார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் வைரவனை கைது செய்தனர். கைதான வைரவனுக்கு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் அவர் பாலியல் புகாரில் சிக்கி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x