குஜராத்தில் நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக கர்பா நடனமாடிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வட மாநிலங்களில் நவராத்திரி விழா பண்டிகையின் ஒரு பகுதியாக கர்பா நடனமாவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நடனத்தில் வயது வித்தியாசமின்றியும், ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கின்றனர்.
குஜராத்தில் கப்பத்பஞ்ச் கேடா மாவட்டத்தில், மைதானம் ஒன்றில் கர்ப்பா நடனம் நடைபெற்று வந்தது. இதில் 17 வயதான வீர்ஷா என்ற மாணவனும் பங்கேற்று நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனக்கு மயக்கம் ஏற்படுவதாக கூறிய அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மிகுந்த சோகத்திற்கு இடையே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிறுவனின் தந்தை ரிபள் ஷா, தொடர்ந்து இது போன்ற நடனங்களில் ஓய்வின்றி கலந்து கொள்ளக் கூடாது எனவும் இதனால் தனது மகனை இழந்து விட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் நடைபெற்ற கர்பா நடனங்களில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதால் அங்கு பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது. நடனமாட விரும்புவர்கள் அவ்வப்போது ஓய்வு எடுத்து மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.