வீடியோ எடுத்து பாம்பை அடித்துக்கொன்ற வாலிபர்... வனத்துறையினர் காட்டிய அதிரடி


மைதானத்தில் ஊர்ந்த பாம்பை அடித்து கொன்ற வாலிபர்

கோவை அருகே மைதானத்தில் ஊர்ந்து கொண்டிருந்த பாம்பை பிடித்து, அடித்துக் கொன்ற வாலிபரின் வீடியோ வைரலானதை அடுத்து வனத்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடி பகுதியில் ஒரு வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த காலி இடத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. இதனைக் கண்ட இந்த பணியாளர்களில் ஒருவர் அந்த பாம்பை பிடித்து தரையில் அடித்து கொல்ல முயன்றார்.

பாம்பை அடித்து கொன்ற வாலிபர்

அப்போதும் பாம்பின் உயிர் பிரியாததால், தார்ச்சாலைக்கு கொண்டு வந்து மீண்டும் அதனை தரையில் அடித்துள்ளார். இதை தொடர்ந்து பாம்புக்கு சிறிது உயிர் இருப்பதை அறிந்தவுடன், கல்லால் அதன் தலையில் அடித்து அதனை கொன்றுள்ளார்.

இந்த அதிர வைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் உயிரிழந்த பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமான விஷமற்ற சாரைப்பாம்பு என்பது தெரியவந்தது.

மேலும் பாம்பை அடித்துக் கொன்றவர், திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே உள்ள ரெட்டிவலத்தை சேர்ந்த விஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி அவரை கைது செய்துள்ள போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x