இந்த 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது... உயர் நீதிமன்றம் அதிரடி!


ஆர்எஸ்எஸ் பேரணி

பேரணியில் பங்கேற்பவர்கள் 500 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். பேரணியின் போது, யாரும் சாதி, மதம் சார்ந்து பேசவோ, பாடல்கள் பாடவோ கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை வரம்பிற்கு உட்பட்ட 20 இடங்களில் வரும் 22-ம் தேதி விஜயதசமி நாளன்று பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கும்படி ஆர்எஸ்எஸ் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு மீது நீதிபதி இளங்கோவன் தீர்ப்பளித்தார்.

இருதரப்பு வாதங்கள் அடிப்படையில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி இளங்கோவன், ‘‘மதுரை, ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. மற்ற மாவட்டங்களில் பேரணி நடத்திக்கொள்ளலாம். மனு தள்ளுபடி செய்யப்பட்ட 3 மாவட்டங்கள் 30-ம் தேதிக்கு பிறகு பேரணி நடத்த விரும்பினால், புதிதாக மனு கொடுத்து அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம்’’ என உத்தரவிட்டு முடித்து வைத்தார்.

இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி அளித்த இடங்களில் பேரணி, பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளித்து, ‘’மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதி செய்ய வேண்டும்,பேரணியில் பங்கேற்பவர்கள் 500 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பேரணியின்போது, யாரும் சாதி, மதம் சார்ந்து பேசவோ, பாடல்கள் பாடவோ கூடாது. பேரணியிலும், கூட்டத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. நிபந்தனைகளை மீறுவது கண்டறியப்பட்டால் பேரணி, பொதுக் கூட்டத்தை நிறுத்துவதற்கு போலீஸுக்கு அதிகாரம் உண்டு’’ என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

x