சினிமா பாணியில் போலி டிடிஆர்... சென்னையில் ரயில் பயணிகள் அதிர்ச்சி!


கைது செய்யப்பட்ட போலி டிக்கெட் பரிசோதகர் வெங்கட கிஷோர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் உடை அணிந்த ஒரு நபர் தன்னை டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி, பயணிகளின் டிக்கெட்டுகளைப் பரிசோதித்து கொண்டிருந்தார். மேலும் தன்னிடம் இருந்த பயணச் சீட்டுகளையும் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பயணி ஒருவர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அப்போது டிக்கெட் கவுன்டர் அருகே புறநகர் ரயில் டிக்கெட் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த நபரை ரயில்வே போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வெங்கட கிஷோர் (42) என்பதும், புறநகர் ரயில் டிக்கெட்டுகளை போலியாக அச்சிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளிடம் டிக்கெட் உறுதி செய்து தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்துள்ள ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா பாணியில் போலி டிடிஆர் சிக்கிய விவகாரம் சென்னையில் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x