அதிர்ச்சி... மேற்கூரை இடிந்துவிழுந்து 3 பேர் பலி; பேருந்துக்காக காத்திருந்தபோது சோகம்


மேற்கூரை இடிந்துவிழுந்து விபத்து

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள கொழுமத்தில் சமுதாய நலக்கூடம் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்த விபத்தில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சேதமான நிலையில் உள்ள கட்டடங்கள் மேலும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள கொழுமத்தில், பழுதடைந்து நிலையில் சமுதாய நலக்கூடம் இருந்துள்ளது. நேற்று முழுவதும் தொடர் மழை பெய்த காரணத்தால் மேற்கூரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது.

பேருந்துக்காக காத்திருந்த மூவர் பலி

இதில் பேருந்துக்காக காத்திருந்த கொழுமத்தைச் சேர்ந்த முரளி ராஜா, மணிகண்டன், கௌதம் ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். பலத்த காயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே மூவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது‌.

அரசு மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்

இது குறித்து குமரலிங்கம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

x