வேடசந்தூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 45 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்


வேடசந்தூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மூடையில் கொண்டுசெல்லப்பட்ட குட்கா.

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே நடந்த வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 46 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மூடை ஏற்றிக்கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரசால் தடைசெய்யப்பட்ட 46 கிலோ எடையுள்ள குட்கா பாக்கெட்கள் இருந்ததும், அவற்றை கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வேடசந்தூர் உசேன் ராவுத்தர் தெருவை சேர்ந்த முகமது ரபீக்கை (30) கைது செய்த போலீஸார், இருசக்கர வாகனத்தையும் குட்காவையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வேடசந்தூர் போலீஸார், ரபீக் யாரிடமிருந்து குட்காவை வாங்கி வந்தார், அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x