பழநி அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற விஏஓ அவரது உதவியாளர் மற்றும் காவலர்களைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில் திமுகவினர் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்துள்ள கிழக்கு ஆயக்குடி கிராமம் பொன்னிமலை சித்தர் கோயில் அருகே நேற்று காலை சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு புகார் வந்தது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் இலாகி பானு ஆகியோர் அங்கு சென்றனர்.
அப்போது, அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில், தாதநாயக்கன்பட்டி கிராமத்தில் மணல் அள்ளுவதற்கான அனுமதிச்சீட்டை பயன்படுத்தி பொன்னிமலை பகுதியில் மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சட்ட விரோதமாக மணல் அள்ளியதாக லாரியை ஆயக்குடி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது, லாரியைப் பின் தொடர்ந்து சென்ற கிராம உதவியாளர் மீது லாரியின் பின்பக்க கதவை திறந்து மணலை கொட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயன்றுள்ளனர். அத்துடன் லாரியை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற விஏஓ கருப்புசாமி, மேலக்கோட்டை விஏஓ பிரேம்குமார் ஆகியோரை முன்னோக்கி செல்லவிடாமல் லாரியை வைத்து கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து ஆயக்குடி காவல் நிலையத்தில் விஏஓ கருப்புசாமி புகார் அளித்தார். மணல் திருட்டைத் தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்களை கடத்தல்காரர்கள் கொலை செய்ய முயன்ற விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணாமலை விமர்சனம்
இந்தச் சம்பவத்தைக் கண்டித்திருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கிராம நிர்வாக அலுவலர்கள், தற்பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது” என்று விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில் விஏஓ உள்ளிட்டவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அப்பகுதியை சேர்ந்த சக்திவேல், பாஸ்கரன் என்ற இரண்டு திமுகவினரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.