ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 மாதத்தில் லஞ்சம் பெற்றதாக 13 அரசு அலுவலர்கள் கைது


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 மாதங்களில் லஞ்சம் பெற்றதாக 6 உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி-யான ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரால், கடந்த 5 மாதங்களில் லஞ்சம் பெற்றதாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 6 அரசு உயர் அதிகாரிகள், 7 அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது சய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்குகளில் புகார் கொடுத்த பொதுமக்களின் குறைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி, அடுத்த நாளிலேயே அந்த பணிகளை சரி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் தமிழக முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தலா ரூ.25 ஆயிரத்துக்கான பத்திரத்தை பெறுவதற்கும், தனது தாயாரின் பெயரில் உள்ள வீட்டின் குறை மின் அழுத்த கம்பியை மாற்றி அமைப்பதற்கும், தனக்கு சொந்தமான மனையை வரன்முறைப்படுத்தவும், பட்டா மாறுதல் வேண்டி இரண்டு ஆண்டுகளாக அலைந்து பட்டா கிடைக்காமல் இருந்தவருக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி அடுத்த நாளே அவை அனைத்தும் சரி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள், அரசு ஊழியர்கள் யாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் புகார் கொடுக்க முன்வர வேண்டும். புகார் கொடுப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

அவர்களின் குறைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். மேலும் பொதுமக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பிக்கு - 94982 15697, 94986 52169, ஆய்வாளர் 1 - 94986 52166, ஆய்வாளர் 2- 94986 52167, டிஎஸ்பி அலுவலக எண் 04567-230036 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும், dsprmddvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சலுக்கும் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.