சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் வாடிக்கையாளர் நிறுத்தி சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து ஹெல்மெட்டை உதவி ஆய்வாளர் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னையை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி இரவு எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலுக்கு உணவு அருந்த சென்றுள்ளார். அப்போது ஓட்டல் பார்க்கிங்கில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற சத்திய நாராயணன் சாப்பிட்டு முடித்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஹெல்மெட்டை காணவில்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சத்திய நாராயணன் உடனே ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காக்கி உடையில் வந்த காவலர் ஒருவர் ஹெல்மெட்டை திருடி சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் இது குறித்து விசாரணை நடத்தியதில் ஹெல்மெட் திருடிய நபர் எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் என்பது தெரியவந்தது.
பின்னர் சத்திய நாராயணன் சிசிடிவி காட்சி ஆதாரங்களோடு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சென்னை காவல்துறையை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை பதிவிட்டது வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சென்னை காவல்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, ஓட்டலில் ஹெல்மெட் திருடிய நபர் எழும்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் விஜயன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் உதவி ஆய்வாளர் விஜயனிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை உதவி ஆய்வாளர் ஓட்டலில் ஹெல்மெட் திருடிய சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.